பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவை ஒட்டிப் பல்லாயிரக்கணக்கானோர் பிரயாக்ராஜுக்குச் செல்வதால் நெடுஞ்சாலைகளில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
முன்னதாக, வசந்த பஞ்சமிக்குப் பிறகு கூட்டம் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை இப்போது அதற்கு நேர்மாறாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடுவதற்காகப் பிரயாக்ராஜ் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலக் காவல்துறை, பிரயாக்ராஜ் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளது. 200-300 கிலோமீட்டர் தொலைவிற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதால் அங்குச் செல்ல முடியாது என்று காவல்துறை கூறியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள ஆடவர் ஒருவர், “வாகனங்கள் 48 மணி நேரமாகச் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. 50 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க ஏறத்தாழ 10லிருந்து 12 மணி நேரம் பிடிக்கிறது,” என்று கூறினார்.
வாரணாசி, லக்னோ, கான்பூர் ஆகியவற்றிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளில் 25 கிலோமீட்டர் வரையிலான வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
கும்பமேளாவை ஏற்று நடத்தும் பிரயாக்ராஜ் நகருக்குள்ளும் ஏறக்குறைய ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசல் காணப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் சந்திப்பில் தற்போது ஒரு திசையில் மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
பிப்ரவரி 10ஆம் தேதி ஏறக்குறைய 46 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அதிகாரிகள் கூறினர். கடந்த மாதம் கும்பமேளா தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 44 கோடிப் பேர் புனித நீராடியிருப்பதாகக் கூறப்பட்டது.