பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழா கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாநில அரசு கடுமையான ஐந்து நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பிரயாக்ராஜ் நகருக்கு வருபவர்களுக்கு வியாழக்கிழமை (ஜனவரி 30) முதல் விவிஐபி எனப்படும் அதிமுக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு அனுமதி வழங்குவதை ரத்து செய்யும்படி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சில வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படியும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக என்டிடிவி ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
ஐந்து முக்கிய மாற்றங்கள்
[ο] வாகனங்கள் முற்றிலும் இல்லாத பகுதி: மகா கும்பமேளா பகுதிக்குள் அனைத்து வகையான வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டத்தை நிர்வகிக்க முடியும்.
[ο] விவிஐபி அனுமதி அட்டை ரத்து: விவிஐபிக்களுக்கான சிறப்பு அனுமதி அட்டையை ரத்து செய்வதன் மூலம் வாகன நுழைவை அனுமதிக்காமல் தவிர்க்கமுடியும்.
[ο] ஒருவழிப்பாதை அமல்: பக்தர்களின் நடமாட்டத்தைச் சீரமைக்க ஒருவழிப் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
[ο] மாவட்ட எல்லையில் நிறுத்தம்: கூட்ட நெரிசலைக் குறைக்க அண்டை மாவட்டங்களில் இருந்து பிரயாக்ராஜ் நகருக்கு வரும் வாகனங்கள் மாவட்ட எல்லையில் நிறுத்தப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
[ο] பிப்ரவரி 4 வரை கடுமையான கட்டுப்பாடுகள்: பிப்ரவரி 4ஆம் தேதிவரை பிரயாக்ராஜ் நகருக்குள் நான்கு சக்கர வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கூட்ட மேலாண்மை முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் கோயல் மற்றும் பானு கோஸ்வாமி ஆகியோர் உடனடியாக பிரயாக்ராஜ் நகரை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பிரயாக்ராஜில் இருந்து வெளியேறும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் தங்குதடையின்றி வெளியேறவும் போதிய ஏற்பாடுகளைச் செய்யும்படி மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. சாலையோர வியாபாரிகளை காலி இடங்களுக்கு அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3ஆம் தேதி வசந்த பஞ்சமி நாளில் ‘அம்ரித் ஸ்னான்’ நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை காவல்துறை டிஜிபியும், தலைமைச் செயலரும் ஆய்வு செய்வதற்கு யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, “நிர்வாகச் சீர்கேடும், பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் விஐபிக்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணம். இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.
“விஐபி கலாசாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பக்தர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும்,” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே கருத்தினை தெரிவித்திருந்த நிலையில், யோகி ஆதித்யநாத் கும்பமேளா புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்
அனைத்து பக்தர்களும் நகரத்திலிருந்து பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் புறப்படுவதை உறுதிசெய்யுமாறும் பிரயாக்ராஜ் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புனித நீராடலை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பும் வகையில் பிரயாக்ராஜ் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஏராளமான பக்தர்கள் தயாராகி வருவதால், ரயில்வே அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுமாறு திரு ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த எல்லைப் புள்ளிகளில் ‘ஹோல்டிங்’ பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உணவு, குடிநீர், தடையில்லா மின்சாரம் ஆகியவற்றுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாநில அரசு உறுதியளித்துள்ளது.
நீதி ஆணையம் அமைப்பு
கூட்ட நெரிசலுக்கான காரணங்களை விசாரிக்க மூவர் கொண்ட நீதித்துறை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் இயக்குநர் ஜெனரல் விகே குப்தா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விகே சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.