திருப்பதியில் நடைபெறும் கோவில்களின் மகா கும்பமேளா

2 mins read
82fcdfd3-6f19-4afd-8e9c-a539fe97af86
உலக அளவில் பிரபலமாக உள்ள 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின்கீழ் கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். - படம்: ஊடகம்

அமராவதி: இந்தியாவின் வளர்ச்சியில் ஆன்மீகச் சுற்றுலாவுக்கு சிறப்பு வாய்ந்த இடம் உண்டு என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

அனைத்துலக கோவில்கள் மாநாடு–கண்காட்சி திருப்பதியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. டெம்பிள் கனெக்ட், அந்தியோதயா பிரதிஷ்டான் அறக்கட்டைகள் ஆகியன இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தன. 58 நாடுகளில் உள்ள 1,581 பக்தி அமைப்புகள் இதில் பங்கேற்றுள்ளன.

ஆன்மீகச் சுற்றுலாத்தலங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உலக அளவில் பிரபலமாக உள்ள 32 லட்சம் கோவில்களை ஒரே கூட்டமைப்பின்கீழ் கொண்டு வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிப்ரவரி 19ஆம் தேதி (இன்று) வரை நடைபெற உள்ள இந்த மாநாட்டை கோவில்களின் மகா கும்பமேளா என்று குறிப்பிடுகின்றனர்.

மாநாட்டில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அனைவரும் தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்துத்தான் பேசுகிறார்கள் என்றும் கோவில்களை நிர்வகிப்பதில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயைக் காணிக்கையாகத் தருகின்றனர். அவற்றை ஏழை, எளிய மக்களுக்காகப் பயன்படுத்துகிறோம்.

“அதே சமயம் நாட்டின் உள்கட்டமைப்பு மேலும் முன்னேற வேண்டியது மிக அவசியம். ஆந்திராவில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்துவித வசதிகளும் செய்து தரப்படும்.

“கோவில்களைச் சுற்றிலும் பசுமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை வடிவமைக்க நமது பலமான பாரம்பரியங்கள், நவீன கண்டுபிடிப்புகளைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோம்,” என்றார் சந்திரபாபு நாயுடு.

குறிப்புச் சொற்கள்