மில்லியன்கணக்கானோர் பங்கேற்கும் மகா கும்பமேளா திங்கட்கிழமை தொடங்குகிறது

3 mins read
503e78ca-8d66-434a-a375-a3acf1b119a3
கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று பிரயாக்ராஜில் திரண்ட பக்தர்கள். - படம்: இபிஏ

பிரயாக்ராஜ்: ஆறு வார மகா கும்பமேளா திங்களன்று (ஜனவரி 13) தொடங்குவதை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலமே கோலாகலமாக உள்ளது.

இந்துக்களின் இந்தப் புனிதவிழா சமயம், ஆன்மிகம், சுற்றுலா, கூட்ட நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகின் மிக அதிக அளவிலான கூட்டத்தைக் கொண்ட விழாவாக இருக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் வடக்கு நகரமான பிரயாக்ராஜ், திரிவேணியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை, யமுனை, கண்களுக்குப் புலப்படாத சரசுவதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிப்பதால் இது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 45 நாள்கள் நடக்கும் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூன்று புனித நதிகளின் சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.

பிரயாக்ராஜ் நகரை நோக்கி சாதுக்களும், துறவிகளும், அகோரிகளும் வந்த வண்ணம் உள்ளனர். மலைக்குகைகளிலும் வனங்களிலும் வசிக்கும் நாகா துறவிகள் உள்ளிட்ட பல வகை துறவிகளும் அங்கு குவிந்துள்ளனர். விதவிதமான வேடங்களில் அகோரிகள் வண்ணப்பொடிகளைத் தூவியும் கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்தபோது பக்தர்கள் அவர்களை பக்தி பரவசத்துடன் வணங்கினர்.

புனித நீரில் மூழ்குவது மக்களின் பாவங்களை ஒழிக்கிறது என்று இந்துக்கள் நம்புகின்றனர். கும்பமேளாவின்போது, வாழ்க்கை-மரணம் என்ற சுழற்சியிலிருந்து விடுதலை கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.

மில்லியன்கணக்கான மக்களை நிர்வகிக்கும் அதேநேரத்தில் தொன்மையான திருவிழாவின் புனிதத்தையும் பாதுகாக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்த அதிகாரிகளுக்கு கும்பமேளா ஒரு சவால்.

மகா கும்பமேளா விழாவிற்காக உத்தரப்பிரதேச அரசு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

நதிகளின் கரையோரங்களில் 4,000 ஹெக்டர் பரப்பளவிலான திறந்தவெளி, மக்கள் தங்குவதற்கான 150,000 கூடாரங்களுடன் தற்காலிக நகரமாக மாற்றப்பட்டுள்ளது. 3,000 சமையலறைகள், 145,000 ஓய்வறைகள், 99 வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றுடன் பெண்கள், குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி பகுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகள் 450,000 புதிய மின்சார இணைப்புகளையும் நிறுவியுள்ளனர். ஒரு மாதத்தில் அந்த வட்டாரத்தில் உள்ள 100,000 நகர்ப்புற குடியிருப்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தைவிட அதிக சக்தியை கும்பமேளா பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரயாக்ராஜை இணைக்கும் வழக்கமான ரயில்களைத் தவிர, திருவிழாவின்போது 3,300 பயணங்களை மேற்கொள்ளும் 98 சிறப்பு ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 40,000 காவல்துறையினர், இணையக் குற்றவியல் நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் கண்காணிப்புக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை தலைவர் பிரசாந்த் குமார் கூறினார்.

அவசரகால மீட்பு நடவடிக்கைகளில் 125 சாலை ஆம்புலன்ஸ்கள், ஏழு நதி ஆம்புலன்ஸ்கள், துரித மருத்துவ உதவிக்கான விமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பல்வேறு இடங்களில மருத்துவ உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

“எனது மாநிலத்தில் மிகவும் சிறப்பான இந்து விழாக்களில் ஒன்றை நடத்தும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது,” என்று தெரிவித்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்புப் பேருந்துகளையும் ‘அடல் சேவா’ மின்சாரப் பேருந்துகளையும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

ஆதித்யநாத் சக்திவாய்ந்த இந்து துறவி என்பதுடன் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான இந்து அரசியல்வாதியும் ஆவார்.

இந்த ஆண்டு விழாவுக்காக மாநில அரசாங்கம் 64 பில்லியன் ரூபாயை (யுஎஸ் 765 மில்லியன் வெள்ளி) ஒதுக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்