மகா கும்பமேளா: முதல் நாளில் 15 மில்லியன் பேர் புனித நீராடல்

2 mins read
a2e861de-4905-45c6-bd6c-8e41535a9426
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் 69,000 எல்ஈடி, சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் முதல் நாளன்று 15 மில்லியன் பேர் புனித நீராடியதாகத் தெரிய வந்துள்ளது.

ஜனவரி 13ஆம் தேதியன்று தொடங்கியது மகா கும்பமேளா. முதல் நாளன்று எதிர்பார்க்கப்பட்டதைவிட ஆறு மடங்கு பக்தர்கள் பனிக்கட்டியைப் போல் குளிர்ச்சியாக இருந்த நதி நீரில் நீராடினர்.

“மிகவும் தடைகளற்ற, சுத்தமான திரிவேணிச் சங்கமத்தில் நீராடியதன் மூலம் பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

மகா கும்பமேளாவில் பங்கேற்று நீராடுவதன் மூலம் ஒருவரது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என நம்பப்படுகிறது. மகா கும்பமேளாவில் முதல் நாளன்று 40,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கூட்டத்தைச் சமாளிக்கவும் முதியவர்களுக்கு வழிகாட்டவும் தன்னார்வலர்களும் உதவினர். லட்சக்கணக்கானோர் கூடிய நிலையில், ஏராளமான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்துடன் இயங்குவதாக காவல்துறை தெரிவித்தது.

பிரயாக்ராஜ் பகுதியில் முதல் நாளன்று பக்தர்களும் இந்து சமய சாதுக்களும் புனித நீராடினர். அங்கு மகா கும்பமேளாவையொட்டி 450,000 புதிய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புறங்களில் உள்ள ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு மாதம் தேவையான மின்சாரத்துக்கு ஈடாக கும்பமேளா மின்தேவை இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நதிக்கரை ஓரங்களில் உள்ள 150,000 தற்காலிக கூடாரங்கள், வீடுகளிலும் வருகையாளர்கள் தங்கியுள்ளனர். 3,000 சமையல் கூடங்கள், 145,000 கழிவிடங்கள், 99 வாகன நிறுத்துமிடங்கள் எனப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜ் நகருக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களைத் தவிர 98 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மொத்தம் 3,300 முறை இந்த ரயில்கள் பிரயாக்ராஜுக்கு இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் 69,000 எல்ஈடி, சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 15,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரயாக்ராஜ் நகரில் புதிய சோதனைச் சாவடிகள், காவல் நிலையங்கள் ஆகியன அமைக்கப்பட்டு இருப்பதுடன் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மூன்று மிதக்கும் காவல் நிலையங்களும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா சிறிய ரக வானூர்திகள் பயன்படுத்தப்படும் நிலையில், தண்ணீருக்கு அடியில் 100 மீட்டர் ஆழம் வரை இயங்கும் டிரோன்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

351 தீயணைப்பு வாகனங்களும் 2,000 பயிற்சி பெற்ற வீரர்களும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், 1.3 பில்லியன் மதிப்பிலான தீயணைப்புக் கருவிகள் உதவியோடு தீச்சம்பவங்களில் இருந்து பக்தர்கள் பாதுகாக்கப்படுவர் என்று கூறினர்.

மகா கும்பமேளா இந்தியாவின் ஒப்பற்ற ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கி, நம்பிக்கையுடன், நல்லிணக்கத்துடனும் கொண்டாடப்படுகிறது என பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்