பிரயாக்ராஜ்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கியது.
45 நாள்களாக நடைபெற்ற கும்பமேளா மகா சிவராத்திரியுடன் (புதன்கிழமை) நிறைவடைந்தது.
பிப்ரவரி 26 கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும் பக்தர்களும் அலை அலையாக வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மகா கும்பமேளாவில் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 68 கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப் பிரதேச அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கும்பமேளாவுக்காக 7,500 கோடி ரூபாய் செலவில் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் மகா கும்ப நகர் தயார் செய்யப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான தங்கும் கூடாரங்கள், கழிவறைகள், 30 மிதக்கும் பாலங்கள், 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு புனித நீராடும் படித்துறைகள் என பல வசதிகள் கட்டப்பட்டன.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169ஆம் ஆண்டு நடைபெறும்.
11 மருத்துவமனைகள், நூற்றுக்கணக்கான அவசர உதவி வாகனங்கள், 50,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் என்று அனைத்தும் தயார் நிலையில் இருந்ததால் எந்தவித பெரிய அசம்பாவிதமும் இன்றி மகா கும்பமேளா நிறைவு பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா கும்பமேளாவில் ஜனவரி 29ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளாவுக்குச் செல்லக் காத்திருந்த பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அதில் 18 பேர் உயிரிழந்தனர்.