லக்னோ: உத்தரப் பிரதேச மாநில மகாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துக்க நிகழ்வில் மேலும் கிட்டத்தட்ட 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்பில், முன்னாள் நீதிபதியான ஹர்ஷ் குமார் தலைமையில் மூவர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 29ஆம் தேதி) அமாவாசையை முன்னிட்டு அன்று அதிகாலை கங்கை, யமுனை (கண்ணுக்குத் தெரியாத) சரஸ்வதி ஆகிய நதிகள் கலக்கும் திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவதற்காகப் பக்தர்கள் ஒருசேர முன்னேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி மாண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்துப் பேசிய காவல்துறை துணைத் தலைமைத் தளபதி வைபவ் கிருஷ்ணா, கூட்ட நெரிசலில் 30 பக்தர்கள் இறந்ததுடன் மேலும் 60 பேர் காயமடைந்ததாகக் கூறினார்.
“கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட இந்த நிகழ்வு அதிகாலை 1லிருந்து 2 மணிக்குள் நேர்ந்தது. பக்தர்கள் கூட்டம் தடுப்புகளைத் தகர்த்து அடுத்த பகுதிக்கு முன்னேறியது. இதில் அங்கு காத்திருந்தவர்கள் சிக்கி நசுக்கப்பட்டனர். இதில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 30 பேர் மரணமடைந்துள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 24 பேர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிவிட்டதாகவும் மேலும் 36 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.