மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.
இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வியாழக்கிழமை (ஜூலை 30) இரவு 11.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம் 48 வீடுகள் இருந்தன.
“இந்தக் கட்டடத்தைப் பல மாதங்களுக்கு முன்னரே ஆபத்தான வசிப்பிடம் என்று நகராட்சி நிர்வாகம் வரையறுத்து கடிதம் அனுப்பியது. இருந்தும் அதிலிருந்து சில மக்கள் வெளியேறாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர்,” என்று அதிகாரிகள் கூறினர்.
ஏற்கெனவே பல்வேறு குடும்பங்கள் சரியான நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டடத்திலிருந்து வெளியேறாத மராமத்துப் பணியில் இருந்த தொழிலாளர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர், தானே மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் ஒருவன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பிவாண்டி நகராட்சி நிர்வாக துணை ஆணையர் அரவிந்த் கோகரே கூறுகையில், “கட்டடத்தில் விரிசல் விழுவதாகத் தகவல் வந்ததுமே நாங்கள் அங்கே சென்றுவிட்டோம். எங்கள் குழுவினர் வீடுவீடாகச் சென்று எல்லோரையும் வெளியேற்றினர். சில பெண்கள் ஒத்துழைக்கவில்லை.
“கட்டடத்தில் சட்டவிரோதமாக மராமத்துப் பணிகள் நடந்துவந்தன. குடியிருப்புவாசிகள் எல்லோரையும் ஒருவழியாக வெளியேற்றிய நிலையில் வேலையாள் மட்டும் வரவில்லை. நாங்கள் மக்களை வெளியேற்றி கட்டடத்திலிருந்து வெளிவந்த சில நிமிடங்களில் மொத்தக் கட்டடமும் இடிந்து விழுந்தது,” என்றார்.

