தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தலுக்குப் பிறகே மகாராஷ்டிர முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும்: காங்கிரஸ்

2 mins read
11cdd5dc-4e00-4321-bd2d-9a87597e6610
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சரை முன்னிலைப்படுத்தாமல் மகா விகாஸ் அகாதி கூட்டணி போட்டியிடும் என்று காங்கிரஸ் அக்டோபர் 15ஆம் தேதி தெரிவித்தது.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உட்பட கூட்டணியின் அனைத்துப் பங்காளிகளும் தேர்தலில் முதலமைச்சரை முன்னிலைப்படுத்தாமல் போட்டியிடுவதில் ஒருமனதாக உள்ளன.

மஹாயுதி கூட்டணியைத் தோற்கடிப்பதற்கே எதிர்க்கட்சிக் கூட்டணி முன்னுரிமை அளிப்பதாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் 90% இடங்கள் குறித்து மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளதாக ரமேஷ் சென்னிதலா குறிப்பிட்டார்.

“முதலமைச்சரைக் காட்டி தேர்தலில் போட்டியிடுவது தற்போதைக்கு உடனடி முன்னுரிமை பெறவில்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த விவகாரத்தில் எங்களைப் போன்ற முடிவில் உள்ளன,” என்றார் சென்னிதலா.

மகாராஷ்டிர தலைவர்களுடன் கட்சி நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் புதுடெல்லிக்குச் சென்றிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இதர உயர்மட்ட மாநிலத் தலைவர்களும் இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஹரியானா தேர்தல் முடிவுகள் குறித்து கேட்கப்பட்டபோது, மகாராஷ்டிராவிலும் கட்சி அதே தவறுகளைச் செய்யாது என்று சென்னிதலா பதிலளித்தார்.

“ஹரியானா முடிவுகள் எங்களுக்கு ஒரு பாடம். நாங்கள் இணைந்து செயல்பட்டு ஒற்றுமையாகவே இருப்போம். எங்களுக்குள் மோதல் இருக்காது,” என்றார் அவர்.

ஆக அதிக தகுதிபெற்ற வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தேதிகள் அறிவிப்பு

இந்நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தல் தேதிகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜார்கண்ட்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13, 20ஆம் தேதிகளிலும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடனும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடனும் முடிவடைய உள்ளது.

இந்நிலையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்