மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் நானா படோல் 200 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தோல்வியடைந்த நிலையில் சகோலி தொகுதியில் போட்டியிட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கடைசி நேர வாக்கு எண்ணிக்கையில் முன்னிலைப் பெற்று வெற்றி பெற்றார். 10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அவினாஷ் பிரமான்கரைவிட நானா படோல் 476 வாக்குகளுடன் பின்தங்கியிருந்தார்.
ஆனால் 15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 535 வாக்குகள் பெற்று அவர் முன்னிலை பெற்றார். கடைசியாக 28வது சுற்றின் முடிவில் மீண்டும் 658 வாக்குகளுடன் பின்தங்கினார் படோல்.
அதன்பிறகு, தபால் வாக்குகளில் சில சுற்றுகளின் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டதில் அவருக்கு கூடுதல் வாக்குகள் குவிந்தன.
இதையடுத்து பாஜக, காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில், படோல் 208 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

