மும்பை: மகாராஷ்டிரா மாநிலத் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார்.
புதன்கிழமை (ஜனவரி 28) புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அஜித் பவார் காலை 8 மணிவாக்கில் சிறிய ரக தனி விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கினார்.
விமானம் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரெனக் கீழே விழுந்து நொறுங்கியதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
காலை 8.45 மணியளவில் நடந்த அந்த விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணம் செய்த இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு விமானிகள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
66 வயதான அஜித் பவார், மகாராஷ்டிரா மாநிலத் துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பங்கு முக்கியமானது.
அஜித் பவாரின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“அஜித் பவார் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது. இது, ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அஜித் பவார் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்,” என்று இந்திய அதிபர் திரௌபதி முர்மு சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார். கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பைக் கொண்டிருந்தார். கடின உழைப்பாளி. மகாராஷ்டிரா மக்களுக்குச் சேவை செய்வதில் அதிகக் கவனம் செலுத்தினார்,” என்று பிரதமர் நரேந்திர மோடியும் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலை ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

