தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உத்தவ், சரத் பவார் செல்வாக்கை நொறுக்கிய ஷிண்டே, அஜித் பவார்

2 mins read
86b0a4cd-e397-48b3-9ff5-043a03ba03d9
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்து மகாராஷ்டிர தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.

மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி, இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 288 தொகுதிகளில் 236 தொகுதிகளுக்கு மேல் வென்று 80 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது.

தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான அபார வெற்றியை அந்தக் கூட்டணி பதிவு செய்துள்ளது.

பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இத்தோல்வி உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

2022ஆம் ஆண்டு உடைந்த சிவசேனா அணிகள் இரண்டும் 51 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 36 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

உத்தவ் தாக்கரே கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளில் 50 விழுக்காடு மும்பையில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 15 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இதே போன்று இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் 35 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 27 தொகுதிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

மேற்கு மகாராஷ்டிராவில் அஜித் பவாருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிட்டி இருக்கிறது. அங்குள்ள 9 தொகுதிகளில் அஜித் பவார் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

அஜித் பவார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யுகேந்திர பவாரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சரத் பவார் உணர்ச்சிபூர்வமாக தேர்தல் பிரசாரம் செய்தார். இத்தேர்தலில் அனுதாபம், துரோகம் என எதுவும் எடுபடாமல் போனது.

உத்தவ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தில் மஹாயுதி அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவோம் என்று சொன்னது எதிர்மறையான விளைவுகளை தேர்தலில் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தேர்தல் முடிவுகள், உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்அணி எது என்பதை நிரூபித்து இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்