மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட 536 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணமும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு வருகிற 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரசாரம் மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெறுவதைத் தடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 6,382 புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்குக் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அன்று முதல் நவம்பர் 14 வரை தேர்தல் ஆணையத்தின் ‘சிவிஜில்’ செயலியில் இந்தப் புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சிவிஜில் செயலி இந்திய தேர்தல் ஆணையத்தால், பொதுமக்கள் புகாரளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் விதிமீறல் புகார்கள் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் தீர்வுகாணப்படும்,” என்று கூறியுள்ளார்.
விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.536 கோடி ரொக்கப் பணமும் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 15 முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்கள், தங்கம், வெள்ளி உள்பட விலையுயர்ந்த பொருள்களின் மதிப்பீடு அது. அமலாக்கத்துறை அதிகாரிகள் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மஹா யுதி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது. கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார்.

