மும்பை: கைப்பேசியில் தற்படம் (செல்ஃபி) எடுத்த ஆடவரைக் காட்டு யானை மிதித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்தது.
ஸ்ரீகாந்த் ராமச்சந்திர சத்ரே, 23, என்ற அந்த இளையர், தம் நண்பர்கள் இருவருடன் வியாழக்கிழமையன்று (அக்டோபர் 24) காட்டு யானையைப் பார்ப்பதற்காக கச்சிரோலியில் உள்ள அபப்பூர் காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கச்சிரோலி காட்டுப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்த யானை, அபப்பூர் காட்டுப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகத் தகவல் பரவியது.
இதனிடையே, கச்சிரோலி மாவட்டத்தில் கம்பிவடம் பதிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சத்ரேவும் அவருடைய நண்பர்களும் காட்டு யானையைப் பார்க்கச் செல்வது என முடிவுசெய்தனர்.
அதன்படி, சற்றுத் தொலைவிலிருந்தபடி அவர்கள் மூவரும் காட்டு யானையைக் கண்டு ரசித்தனர். அப்போது, சத்ரே அந்த யானையுடன் தற்படம் எடுக்க முயன்றதாகவும் அதனால் சீற்றமடைந்த யானை அவரை விரட்டி, தாக்கி, மிதித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
அவருடைய நண்பர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி உயிர்பிழைத்தனர்.