ஏர் இந்தியா கட்டடத்தை ரூ.1,601 கோடிக்கு வாங்கிய மகாராஷ்டிர அரசு

ஏர் இந்தியா கட்டடத்தை ரூ.1,601 கோடிக்கு வாங்கிய மகாராஷ்டிர அரசு

1 mins read
b9478e62-e018-4210-b13b-6b7fde5b3af2
தெற்கு மும்பையின் நரிமன் பாயின்ட் பகுதியில் அமைந்துள்ளது ஏர் இந்தியா கட்டடம்.  - கோப்புப் படம்: தி பிரின்ட்

மும்பை: மும்பை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் ஏர் இந்தியா கட்டடத்தை மகாராஷ்டிர அரசு ரூ. 1,601 கோடிக்கு வாங்கியுள்ளது. இத்தகவலை அம்மாநிலப் பொதுத்துறை அமைச்சர் சிவேந்திரசிங் தெரிவித்தார்.

ஏர் இந்தியாவின் சொத்துகளைக் கையாளும் ‘ஏஐஏஹெச்எல்’ (ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட்) நிறுவனத்திடம் இருந்து அந்தக் கட்டடத்தை மாநில அரசு தன்வசப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தெற்கு மும்பையின் நரிமன் பாயின்ட் பகுதியில் அமைந்துள்ளது ஏர் இந்தியா கட்டடம். கடலை நோக்கி அமைந்துள்ள இந்த 23 மாடிக் கட்டடம், 1974ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

பல்வேறு நிர்வாக மாற்றங்களுக்குப் பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய ஒப்பந்தத்தின்படி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இதற்கான சொத்துரிமை மாற்றம் அதிகாரபூர்வமாக நிறைவடைந்துள்ளது.

மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இயங்கும் பல்வேறு அரசு அலுவலகங்கள் இடப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. ஏர் இந்தியா கட்டடம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக அமையும் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், அலுவலக வாடகைக்காகச் செலவிடும் தொகையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய 45,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட இந்தக் கட்டடத்துக்கு அரசு அலுவலகங்கள் இடம்பெயர்வதற்குள் அதன் கட்டமைப்புத் தணிக்கை, பழுது பார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், மகாராஷ்டிராவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதன் முக்கியமான நுழைவாயில் முன்னணி கட்டடக் கலைஞர்களைக் கொண்டு மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்