மும்பை: மகாராஷ்டிராவில் முக்கிய துறைகளைக் கேட்டு ஏக்நாத் ஷிண்டே அடம் பிடிப்பதால் பாஜகவுக்குப் புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
புதிய மகாராஷ்டிர அரசாங்கம், வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 5) பதவி ஏற்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் அந்நிகழ்வு நடைபெறும் என்றும் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மும்பையில் இருக்கும் அஸாத் மைதான் விளையாட்டரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரஷேகர் பவான்குலே சமூக ஊடகங்களில் குறிப்பிட்டார்.
இருப்பினும், புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை.
ஆட்சியைப் பகிர்ந்துகொள்வதில் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்தாலும் பதவியேற்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிண்டே அடுத்து என்ன செய்வார் என்பதற்கான அறிகுறி இதுவரை தெரியவில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வென்றதால் தங்கள் கட்சிக்கே முதல்வர் பதவி வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்றும் பாஜகவினர் தீர்மானமாக இருக்கின்றனர்.
இதை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஏற்றுக் கொண்டு விட்டார். தனக்கு துணை முதல்வர் பதவி மட்டும் கொடுத்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடு.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், தற்போதைய முதல்வரான ஏக்நாத் ஷிண்டே அதனை ஏற்கவில்லை. முதல்வர் பதவி தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி, புதிய அரசு அமைவதில் தாமதத்தை ஏற்படுத்தியது.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆகும் பட்சத்தில், தமக்கு நிதி, வருவாய், உள்துறை போன்ற துறைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.
இந்த மூன்று துறைகளையும் சிவசேனாவுக்கு வழங்காவிட்டால் தமது கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்காது என ஏக்நாத் ஷிண்டே பாஜக தலைமையிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
அந்த மூன்று துறைகளும் முக்கியமானவை என்பதால் பாஜக கையைப் பிசைந்து நிற்பதாகக் கூறப்படுகிறது.