பெலகாவி: பாலேகுந்த்ரி பகுதியில் பயணி ஒருவரிடம் மராத்தி மொழியில் பேசாததற்காக பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) பேருந்து நடத்துநர் மராத்தியில் பேசாமல் கன்னடத்தில் பேசியதற்காக இரண்டு மாணவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெலகாவி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இது, மாநிலங்களுக்கு இடையேயான தகராறாகவும் மாறியது.
நடத்துநர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (பிப்ரவரி 22) கர்நாடகாவின் சித்ரதுர்காவில் மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு அவரது முகத்தில் கறுப்பு வண்ணம் பூசப்பட்டது. பேருந்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள சிவசேனா தொழிலாளர்கள் கர்நாடகப் பேருந்தில் கட்சிக் கொடிகளைக் கட்டி, கோலாப்பூர் மத்தியப் பேருந்து நிலையத்தில் கறுப்பு வண்ணம் பூசினர்.
பேருந்து நடத்துநரைத் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று ஆடவர்களும் ஒரு மைனர் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மைனர் பெண் எதிர் புகாரை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, நடத்துநர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் பெலகாவியில் நடந்தது. கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் இரண்டு மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் KSRTC நடத்துநர் மகாதேவ் ஹுக்கேரி, 51, தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கன்னடம் புரியவில்லை என்று கூறி மராத்தியில் பேசுமாறு மாணவர்கள் அவரைக் கேட்டுக் கொண்டனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட, பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
“எனக்கு மராத்தி தெரியாததால் பேருந்தில் இருந்த ஆறு, ஏழு பேர் என்னைத் தாக்கினர். பேருந்து நிறுத்தப்பட்டவுடன், அங்கிருந்த 50 பேர் என்னை அடித்து உதைத்தனர்,” என்று ஹுக்கேரி கூறினார்.
காயமடைந்த நடத்துநர் பெலகாவியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடத்துநர் ஹுக்கேரி அளித்த காவல்துறை புகாரில், பேருந்தின் ஓட்டுநர் ராஜேசப் மோமினும் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆடவர்களை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மைனர் பெண் சீர்திருத்த இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் ஒரு மைனர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைத் தடுக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் நடத்துநருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதை பெலகாவி காவல் ஆணையர் அடா மார்ட்டின் உறுதிப்படுத்தினார்.
“சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நடத்துநருக்கு எதிராக போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளோம்,” என்று மார்ட்டின் கூறினார்.
மீதமுள்ள குற்றவாளிகளைத் தேட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், மகாராஷ்டிரா எல்லையில் சிவசேனா ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.