தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிரா: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி

2 mins read
423a6d4d-e890-4aaf-9ecb-470c75fb00d4
மொத்தம் 14,298 ஆண்களுக்கு ரூ.21.44 கோடி தொகை வழங்கப்பட்டதாகவும் 26 லட்சம் போலிப் பயனர்கள் இருப்பதாகவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

மும்பை: மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஆளும் பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.

‘லட்கி பெஹன் யோஜனா’ என்ற பெயரில், மகளிர் உரிமைத் திட்டத்தை அறிவித்தது அம்மாநில அரசு. ஆனால், 14,000 ஆண்கள் இத்திட்டத்தின்கீழ் நிதிச் சலுகையைப் பெற்றிருப்பது தற்போது அம்பலமாகி உள்ளது.

மொத்தம் 14,298 ஆண்களுக்கு ரூ.21.44 கோடி தொகை வழங்கப்பட்டதாகவும் 26 லட்சம் போலிப் பயனர்கள் இருப்பதாகவும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள என்டிடிவி செய்தி ஊடகம், திட்டம் தொடங்கப்பட்ட பத்து மாதங்களுக்குப் பிறகே இந்த முறைகேடு குறித்து தெரிய வந்திருப்பதாகக் கூறியுள்ளது.

இணையப்பதிவு முறையைக் கையாண்டு பலர் தங்களை பெண் பயனாளியாகப் பதிவு செய்து மோசடி செய்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் குறைவாக, வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, மாதந்தோறும் ரூ.1,500 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. 21 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்கள் இதனால் பலனடைகின்றனர்.

தேர்தலுக்கு முன்பு, பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி அளித்த இந்த வாக்குறுதி, இக்கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காரணமாக அமைந்தது.

தற்போது மோசடி அம்பலமாகிய நிலையில், பல கோடி ரூபாய் மோசடிக்கு காரணமாக இருந்தவர்கள், பணத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார். இல்லையெனில், அவர்கள் மீது வழக்கு பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஒரு வீட்டில் இரு பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தால் பலனடைய முடியும் என்ற விதிமுறையை மீறி, சுமார் 7.97 லட்சம் பெண்கள் மூன்றாவது உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டதாகவும் மாநிலத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதேபோல், 65 வயதுக்கும் மேற்பட்ட, ஏறக்குறைய 2.87 பெண்கள் சலுகைகளைப் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே வலியுறுத்தி உள்ளார்.

“இந்த மோசடியின் பின்னணியில் பெரிய சதி உள்ளது. இந்த விவகாரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்