தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிராவில் 60 ஆண்டுகளில் இல்லாத சூழ்நிலை; எதிர்க்கட்சி தலைவர் இல்லை

2 mins read
43beea04-a90a-4fb5-b0de-f067829f9b13
எதிர்க்கட்சிகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது, மகாராஷ்டிரா அரசியலில் 60 ஆண்டுகளில் காணாத சூழ்நிலையாகும்.

அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜகவின் மஹாயுதி கூட்டணி 234 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

சிவசேனா 57, மற்றும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றி பெற்றன.

ஆனால் எதிர்க்கட்சிகளின் மஹா விகாஸ் அகாடி கூட்டணியில், உத்தவ் தாக்கரே கட்சி 20, காங்., 16, சரத் பவார் கட்சி 10 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.

இந்தக் கூட்டணி ஒட்டுமொத்தமாக 50 இடங்களில்கூட வெற்றி பெறவில்லை.

இதனால் மகாராஷ்டிரா சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

இது, 60 ஆண்டுகளில் இல்லாத ஒன்று. கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் கிடைக்கவில்லை.

இது குறித்து விளக்கிய சட்டசபையின் முன்னாள் முதன்மை செயலாளர், “பிரதான எதிர்க்கட்சி தகுதியைப்பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10 விழுக்காடு இடங்களை எதிர்க்கட்சி பெற வேண்டும். அதன்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு பரிந்துரைக்க முடியும். தேர்தல் முடிவுகளின் படி, மிகப்பெரிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இதனால் அது, எதிர்க்கட்சி பதவிக்கு உரிமை கோர முடியாது,” என்றார்.

இந்தத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 16 உறுப்பினர்களையும் சரத் பவார் தலைமையிலான என்சிபி, 10 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்