மும்பை: வேலைக்குச் சேரும் காவலர்களை பெரிய பொது மற்றும் சமய விழாக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க மகாராஷ்டிர மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.
அந்த முன்னோடி முயற்சி பிள்ளையார் சதுர்த்தி விழாவின்போது சோதித்துப் பார்க்கப்பட்டது.
செப்டம்பர் 6ஆம் தேதியுடன் முடிவுற்ற பத்து நாள் பிள்ளையார் சதுர்த்தி விழா மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் அமைதியாகக் கொண்டாடப்பட்டதாக மாநில காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) கூறினார்.
“தொடக்கம் முதல் அந்தந்த மாவட்டங்களில் விழாக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். எதிர்பாராத சம்பவங்களை அறிந்து முன்கூட்டியே தடுக்க அந்த முயற்சி கைகொடுத்தது.
எனவே, இனி வரும் நவராத்திரி, சிவராத்திரி, அம்பேத்கர் ஜெயந்தி, இஸ்லாமியப் பெருநாள் மற்றும் இதர விழாக்களிலும் காவலர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார் அந்த அதிகாரி.