மும்பை: சிறுமிகளை ஆபாசமாகப் படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயன் அகமது தன்வீர் என்ற அந்த இளைஞர் கிட்டத்தட்ட 180 சிறுமிகளை 350க்கும் மேற்பட்ட காணொளிகள் எடுத்ததாக உள்ளூர் அரசியல் குழுக்கள் கூறுகின்றன.
எனினும், காவல்துறையினர் இதுவரை எட்டு உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அடையாளம் கண்டுள்ளனர்.
தன்வீர் ஏப்ரல் 21 வரை காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அவரது கைப்பேசியிலிருந்து பல ஆட்சேபனைக்குரிய காணொளிகள் மீட்கப்பட்டன.
தடயவியல் குழுக்கள் தற்போது நீக்கப்பட்ட மேலும் பல தரவுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
காதல் வலையில் வீழ்த்தி பாலியல் சுரண்டல்
சிறுமிகளுடன் நட்பு கொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அவர்களைக் காதல் உறவுகளுக்குள் கவர்ந்திழுத்துள்ளார். பின்னர், அவர் பாதிக்கப்பட்டவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாகவும், அவர்களின் அனுமதியின்றிக் காணொளிகளைப் படம்பிடித்து, பின்னர் அவற்றை மிரட்டுவதற்கும் அச்சுறுத்தல் விடுப்பதற்கும் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படுகிறார்.
இதன்தொடர்பில், உஜேர் கான் இக்பால் கான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கான், தன்வீரின் கைப்பேசியிலிருந்து ஏறக்குறைய 100 ஆட்சேபனைக்குரிய காணொளிகளைப் பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் அடையாளம் காணவும், சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளிகளைத் தவிர, மற்றக் காணொளிகளைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமராவதி ஊரகக் காவல் கண்காணிப்பாளர் விஷால் ஆனந்த் சிங்கூரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பரத்வாடா, அச்சல்பூரில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்..
இந்த வழக்கு மகாராஷ்டிராவில் அரசியலாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன. ஆளும் தரப்பு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுகிறது.

