மும்பை: மகாராஷ்டிராவில், மும்பை, புனே உள்பட, 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வியாழக்கிழமை (ஜனவரி 15) தொடங்கியது. இதில் 15,931 வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 3.48 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் அழியா மைக்குப் பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தப்படுவது சர்ச்சை ஆகியுள்ளது.
“வாக்காளர்களின் விரலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வைக்கப்படும் மார்க்கர் பேனா மையின் அடையாளத்தை எளிதில் அழித்து விடலாம். இதன் மூலம் போலி வாக்குகள் பதிவாகவும் வாய்ப்புள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சியின் பல்வேறு இடங்களுக்குப் போட்டி நிலவினாலும், ஆசிய வட்டாரத்திலேயே செல்வாக்கும் வசதியும் மிக்க மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பை மாநகராட்சியை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதனை வெல்ல கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கு நடைபெற்ற 288 தொகுதிக்களுக்கான உள்ளாட்சி தேர்தலில், ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்றதும், அதே சமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி படுதோல்வியைச் சந்தித்ததும் நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், இதர மாநகராட்சி இடங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ஆளுக்கொரு திசையில் எதிரணியாக இருந்துவந்த உத்தவ் தாக்கரேயும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி வைத்துள்ளனர்.
இது உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே இம்முறை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தல் மாநில அரசியல் அதிகாரத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய யுத்தமாகவே அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது
தொடர்புடைய செய்திகள்
ஜனவரி 16ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதற்கிடையே பதற்றம் நிறைந்த வட்டாரமாக முன்னறியப்பட்ட இடங்களிலும் அங்குள்ள வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

