சாதனை விலைக்கு ஏலம்போன மகாத்மா காந்தி கடிதங்கள்

சாதனை விலைக்கு ஏலம்போன மகாத்மா காந்தி கடிதங்கள்

படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

20 Aug 2026 - 8:28 pm

1 mins read

புதுடெல்லி: மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய அரிய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகிப் புதிய உலகச் சாதனை படைத்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியின் நெருங்கிய கூட்டாளியுமான ஆனந்த் டி.ஹிங்கோரனி என்பவருக்கு மகாத்மா காந்தி எழுதிய 688 கடிதங்கள் அடங்கிய தொகுப்பே இவ்வாறு சாதனை விலைக்கு ஏலம் போயுள்ளது. பிரபல ஏல நிறுவனமான ‘சாஃப்ரானார்ட்’ இந்த ஏலத்தை நடத்தியது.

ஆனந்த் டி.ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு அவருக்கு ஆறுதல் அளிக்கவும் மனத்தெளிவு ஏற்படுத்தவும் காந்தியடிகள் இந்தக் கடிதங்களை எழுதத் தொடங்கினார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்தக் கடிதப் பரிமாற்றங்கள், பின்னர் “ஏ தாட் ஃபார் தி டே” என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளிவந்தன என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

உண்மை, அகிம்சை, அச்சமின்மை, சமய சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, சேவை, தார்மீகப் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிந்தனைகளை அந்தக் கடிதங்களில் காந்தியடிகள் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

இவற்றுடன் காந்தியடிகள் தொடர்பான 86 அரிய பொருள்களும் ஏலம் விடப்பட்டன.

பகவத் கீதை, கடவுள் பற்றிய காந்தியின் கருத்துகள் அடங்கிய கையெழுத்துப் பிரதி ரூ.1.68 கோடிக்கு ஏலம் போனது.

காந்தி எழுதிக்கொண்டிருக்கும்போது எடுக்கப்பட்டு, அவராலேயே கையொப்பமிடப்பட்ட அரிய புகைப்படம் ரூ.78 லட்சத்திற்கு விற்பனையானது.

காந்தியின் கடிதங்கள், தந்திச் செய்திகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்