தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பணிப்பெண் பாலியல் வன்கொடுமை: முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனுக்கு சாகும்வரை சிறை

3 mins read
9fec4aae-d103-4772-8a2d-fc1c670beaaa
கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

பெங்களூரு: வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மஜத கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் எழுந்தது.

பல பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் 3,000க்கும் மேற்பட்ட காணொளிகளும் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்திய நிலையில் பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.

இந்த நிலையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து பெண் தலைவர் உள்ளிட்ட 5 பெண்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில், அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவருக்கு ‘புளூ கார்னர்’ அறிவிப்பு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 2024 மே 31ஆம் தேதி பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து பெங்களூரு மத்திய சிறையில் அடைத்தனர்.

பி.கே.சிங் தலைமையிலான சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல்துறை இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்தது. மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 113 சாட்சிகளுடன் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த செப்டம்பரில் தாக்கல் செய்தனர்.

பிரஜ்வல் வீட்டு பணிப்பெண் கடந்த 2021ஆம் ஆண்டு, ஹொலேநர்சிபுராவில் உள்ள பண்ணை வீட்டில் இரண்டு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட காணொளியை நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாக காவல்துறை தாக்கல் செய்தது.

ஆனால் இதனை மறுத்த பிரஜ்வல், தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார்.

வீடியோவில் இடம்பெற்றுள்ள பிரஜ்வலின் அங்க அடையாளங்கள், இடதுகை மச்சம், செல்போன் பதிவு, பண்ணை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணிப்பெண்ணின் உடைகள் மற்றும் அங்கிருந்த ஊழியர்கள், பிரஜ்வலின் நண்பர்கள், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரது வாக்குமூலம் உள்ளிட்டவை அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

வழக்கின் அனைத்துகட்ட விசாரணையும் கடந்த 20ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி கடந்த 1ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், பிரஜ்வலுக்கான தண்டனை விவரங்களை ஆகஸ்ட் 2ஆம் தேதி நீதிபதி வெளியிட்டார்.

“பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும்வரை சிறைத் தண்டனையுடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்படுகிறது,” என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இதை கேட்ட பிரஜ்வல் மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். இந்த தீர்ப்பைஎதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக பிரஜ்வல் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்