சட்டமன்ற உறுப்பினராக வென்ற பணிப்பெண்

சட்டமன்ற உறுப்பினராக வென்ற பணிப்பெண்

2 mins read
1abe7c8b-1e02-4180-87c0-d3f99bd47107
அரசியலில் நுழையுமுன் மாதம் ரூ.2,500 சம்பளத்தில் வீட்டு வேலைகளைச் செய்துவந்த கலிதா மாஹ்ஜி. - படம்: டைம்ஸ்நவ்

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வீசிய பாஜக ஆதரவு அலை பணிப்பெண் ஒருவருக்குச் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல்ஏ) பதவியைத் தந்துள்ளது.

கலிதா மாஹ்ஜி எனப்படும் அந்தப் பெண், பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்ராம் சட்டமன்றத் (தனி) தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்யாம பிரசன்ன லோஹரை 12,535 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,07,692.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் ஆதரவைப் பெறத் தொகுதி மக்களுடன் கலிதா மேற்கொண்டுவந்த நெருக்கம் முக்கியக் காரணமாக அமைந்தது.

மாதம் ரூ.2,500 சம்பளத்தில் வீட்டு வேலைகளைச் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்திவந்த அந்தப் பெண், ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் சேர்ந்து அரசியலில் நுழைந்தார்.

எந்தப் பணபலமும் இல்லாத அந்தப் பெண்ணை 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக களமிறக்கியது. ஆனாலும், தமக்கு எதிராகத் திரிணாமூல் காங்கிரஸ் நிறுத்திய அபேதானந்த தாந்தரிடம் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.

இம்முறை மீண்டும் அந்தப் பெண்ணுக்கு பாஜக நம்பிக்கையுடன் வாய்ப்பளித்தது. அந்த நம்பிக்கைக்குப் பரிசாக வெற்றி கிடைத்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலின்போது கலிதாவிடம் எந்த ஒரு வசதியும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. அடித்தட்டு மக்களிடமிருந்து உருவான வேட்பாளர் என்ற மதிப்பு அவர்மீது ஏற்பட்டது.

தற்போது அவர் பெற்றிருக்கும் வெற்றி, எளிய பெண்ணும் சமூக, பொருளியல் முன்னேற்றம் காணலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சாதாரண வீட்டுப் பணிப்பெண் எம்எல்ஏவாக ஏற்றம் கண்டிருப்பது, அடிமட்டத் தொண்டர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஜனநாயகத்தின் வலிமையாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்