திருமலை: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜூ சுவாமி கோவில் அருகே ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், அங்குள்ள கடைகள் எரிந்து நாசமாகின.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வடக்கு மாட வீதியில் ஸ்ரீ கோவிந்தராஜூ சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருமலையில் உள்ள மலையின் மீது அமைந்துள்ள திருப்பதி பாலாஜி கோவிலில் இருந்து 9 கி.மீ., தொலைவில் இந்தக் கோவில் உள்ளது.
இந்த பழமைவாய்ந்த கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை ( ஜூலை 7) அதிகாலை ஸ்ரீ கோவிந்தராஜூகோவில் அருகே திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கடைகளுக்கும் தீ பரவியது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் பெரும் பொருள்சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.