புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு வெறும் கண்துடைப்பு என்றும் அது தொகுதி மறுவரை செய்யும் இந்திய அரசின் மாற்றுத் திட்டம் என்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய அரசின் செயல்பாடு இந்திய அரசியல் சட்டத்தின் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொகுதிகளை மறுசீரமைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்ற அவர், மறுவரையறை தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள அணுகுமுறை மிகவும் ஆபத்தானது எனச் சுட்டியுள்ளார்.
ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரை மத்திய அரசு அவசர அவசரமாகக் கூட்டுவது குறித்து சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பலவீனப்படுத்துவதே மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்றும் தென் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கும் இது அச்சுறுத்தலாக அமையும் என்று சோனியா கூறியுள்ளார்.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டமன்றங்கள் தொடங்கி, நாடாளுமன்றம்வரை பல தலைமுறைகளாக நீடித்துவரும் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய சரியான தருணம் வந்துவிட்டதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தாம் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறிய அவர், இந்திய நாடாளுமன்றம் புதிய வரலாற்றைப் படைக்கத் தயாராகிவிட்டது என்றார்.
“இச்சட்டம் கடந்த கால கனவுகளை நனவாக்குவதுடன், வருங்காலத்தின் தீர்மானங்களையும் நிறைவேற்றும். சமூக நீதி என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், நமது பண்பாட்டிலும் முடிவெடுக்கும் செயல்முறையிலும் இயல்பான அங்கமாக இருப்பவை. சமத்துவ இந்தியாவைப் படைப்பதே எங்களது நிலைப்பாடு ஆகும்,” என்றார் பிரதமர் மோடி.
இந்தியப் பெண்கள் நாட்டின் அதிபர் முதல் பிரதமர் பதவிவரை அலங்கரித்து, தங்களுக்கென தனித்துவமான பாரம்பரியத்தை நிலைநாட்டி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இப்போதும்கூட குடியரசுத் தலைவர், நிதி அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்புகளைப் பெண்கள் திறம்பட நிர்வகித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

