அரசியல் சட்டத்தின் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தல்: சோனியா

அரசியல் சட்டத்தின் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தல்: சோனியா

2 mins read
b63806b1-153e-40a9-850f-8a7cdc5f9cf3
மகளிர் இடஒதுக்​கீட்டுச் சட்​டத்தை அமல்​படுத்​த அனைத்​துக் கட்​சிகளும் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி (இடம்) கேட்டுக் கொண்டுள்ளார். சோனியா காந்தி (வலம்) எதிர்க்கிறார். - கோப்புப்படம்: அமர் உஜாலா

புதுடெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு வெறும் கண்துடைப்பு என்றும் அது தொகுதி மறுவரை செய்யும் இந்திய அரசின் மாற்றுத் திட்டம் என்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் செயல்பாடு இந்திய அரசியல் சட்டத்தின் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொகுதிகளை மறுசீரமைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அரசியல் நேர்மையுடன் இருக்க வேண்டும் என்ற அவர், மறுவரையறை தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள அணுகுமுறை மிகவும் ஆபத்தானது எனச் சுட்டியுள்ளார்.

ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுவரும் நிலையில், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரை மத்திய அரசு அவசர அவசரமாகக் கூட்டுவது குறித்து சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பலவீனப்படுத்துவதே மத்திய அரசின் உண்மையான நோக்கம் என்றும் தென் மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றுமைக்கும் இது அச்சுறுத்தலாக அமையும் என்று சோனியா கூறியுள்ளார்.

இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்​டத்தை அமல்​படுத்​த அனைத்துக் கட்​சிகளும் ஒத்​துழைப்பு அளிக்க வேண்​டும் எனப் பிரதமர் நரேந்​திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்​டமன்றங்கள் தொடங்கி, நாடாளு​மன்​றம்வரை பல தலைமுறைகளாக நீடித்துவரும் மகளிர் இடஒதுக்​கீட்​டுக்​கான காத்திருப்பை முடிவுக்​குக் கொண்​டுவர வேண்​டிய சரி​யான தருணம் வந்​து​விட்​டதாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தாம் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறிய அவர், இந்திய நாடாளுமன்றம் புதிய வரலாற்​றைப் படைக்கத் தயா​ராகி​விட்​டது என்றார்.

“இச்சட்டம் கடந்த கால கனவு​களை நனவாக்​கு​வதுடன், வருங்​காலத்​தின் தீர்​மானங்​களை​யும் நிறைவேற்​றும். சமூக நீதி என்​பது வெறும் முழக்​க​மாக இல்​லாமல், நமது பண்பாட்டிலும் முடி​வெடுக்​கும் செயல்​முறை​யிலும் இயல்​பான அங்​க​மாக இருப்​பவை. சமத்​துவ இந்​தி​யா​வைப் படைப்​பதே எங்​களது நிலைப்​பாடு ஆகும்,” என்றார் பிரதமர் மோடி.

இந்​தி​யப் பெண்​கள் நாட்டின் அதிபர் முதல் பிரதமர் பதவிவரை அலங்​கரித்​து, தங்​களுக்​கென தனித்​து​வமான பாரம்​பரி​யத்தை நிலை​நாட்​டி உள்​ளதாகக் குறிப்பிட்ட அவர், இப்​போதும்கூட குடியரசுத் தலை​வர், நிதி​ அமைச்​சர் போன்ற முக்​கியப் பொறுப்​பு​களைப் பெண்​கள் திறம்பட நிர்​வகித்து நாட்​டுக்​குப் பெருமை சேர்த்து வரு​வதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்