புவனேஸ்வர்: இந்தியாவை உலக அளவில் சுற்றுலாவுக்கான மையமாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
18வது வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடான பிரவாசி பாரதிய திவஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் புதன்கிழமை தொடங்கியது.
இம்மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஜெய்சங்கர், இந்தியாவை உலக சுற்றுலாத் தலமாக்க வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
“வெளிநாடுவாழ் இளம் இந்தியர்கள், தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள இளம் நண்பர்களை அழைத்து வர வேண்டும். அவர்கள், நமது தனித்துவமான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை ஆராய வேண்டும். இது நிச்சயமாக வாழ்நாள் பழக்கமாக மாறும்,” என்று திரு.ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.
தூய்மை இந்தியா, பெண் குழந்தைக்கான கல்வி, இலவச உணவுப் பொருள்கள் விநியோகம், முத்ரா, சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி வழங்கும் திட்டம், வயதானவர்களுக்கான மருத்துவக் காப்பீடு, குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவை மாற்றியமைக்கும் முயற்சியாகவே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களை முழுமையாக ஆராய்ந்தால் இந்திய இளையர்களின் எதிர்காலத்தை இந்திய அரசு எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனா தொற்றுப் பரவல் சமயத்தில் குறிப்பிடத்தக்க அளவு பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட ஒரு நாடு, முழு உலகிற்கும் தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்கியது என்றார்.
சந்திரயான்-3 தரையிறக்கம், ஆதித்யா எல்1 ஆய்வகம், முன்மொழியப்பட்ட ககன்யான் பணி ஆகியவை இந்தியாவுக்கு சக்திவாய்ந்த உத்வேகங்களை அளித்துள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.