மலப்புரம்: ரயில் பயணம் செய்தபோது, மேலிருந்த படுக்கை கீழிருந்த பயணிமீது விழுந்து அவரின் உயிரைப் பறித்தது.
அப்படுக்கையின் கொக்கி கழன்று, கேரள மாநிலம், பொன்னாணியைச் சேர்ந்த அலிகான், 62, என்ற ஆடவரின் கழுத்தைப் பலமாகத் தாக்கியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம், எர்ணாகுளம் - நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் மில்லேனியம் அதிவிரைவு ரயிலில் இம்மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த ரயில் தெலுங்கானா மாநிலம் வழியாகச் சென்றபோது இவ்விபத்து நேரிட்டது.
பலத்த காயமுற்ற திரு அலிகான், தெலுங்கானாவின் வாராங்கல் நகரிலுள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார்.
அவரது கழுத்து எலும்பு முறிந்ததால் அவரால் நடமாட முடியாமல் போனதாகக் கூறப்பட்டது. அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாக ‘மனோரமா’ செய்தி தெரிவித்தது.
ஆயினும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் புதன்கிழமையன்று (ஜூன் 26) பொன்னாணியில் அவரது இறுதிச்சடங்கு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ரயில்வே அதிகாரிகள், படுக்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அது ஒழுங்காகப் பொருத்தப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
அந்த ரயிலின் எஸ்6 முன்பதிவுப் பெட்டியில் திரு அலிகான் பயணம் செய்தார். அவருக்குக் கீழ்ப்படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. நடுப்படுக்கையில் இருந்தவர் மேலும் கட்டணம் செலுத்தி, குளிரூட்டி வசதி உள்ள பெட்டிக்குச் சென்றுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மேல்படுக்கையிலிருந்த பயணி முறையாகக் கொக்கியைப் பொருத்தாததால் அது கழன்று திரு அலிகான்மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர் வாராங்கல்லில் இறங்கவிருந்த நிலையில், இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

