கொச்சி: குவைத்தில் உள்ள கல்ஃப் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுவிட்டு மலையாளிகள் தலைமறைவானதாகக் கூறப்படுவது தொடர்பில் இந்தியாவின் கேரள மாநிலக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மொத்தம் 1,400க்கும் மேற்பட்ட மலையாளிகள் கிட்டத்தட்ட ரூ.700 கோடி (S$111 மில்லியன்) பணத்தைச் சுருட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, கல்ஃப் வங்கியின் துணைத் தலைமை மேலாளர் கேரளத்திற்குச் சென்று, காவல்துறை உயரதிகாரியைச் சந்தித்து புகார் அளித்தார்.
அதனடிப்படையில் எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் பத்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கல்ஃப் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தோரில் பலரும் தாதியர் எனச் சொல்லப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தாதோர் பட்டியலை கல்ஃப் வங்கி கேரளக் காவல்துறையுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாக ‘மனோரமா’ இணையச் செய்தி தெரிவிக்கிறது.
இம்மோசடி மூன்று மாதங்களுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தி வங்கியின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பெரிய தொகையைக் கடனாகப் பெற்று, சொந்த நாட்டிற்கு அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பியோடியதாகச் சொல்லப்படுகிறது.
கடன் வாங்கியோரின் உள்ளூர் முகவரிகளையும் அவ்வங்கி காவல்துறைக்கு வழங்கியுள்ளது.
இந்த மோசடியின் பின்னால் பெரிய சதித்திட்டம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் அதிகாரிகள், அதுகுறித்துப் பெரிய அளவில் விசாரணை மேற்கொள்ளத் தயாராகிவருவதாகச் சொல்லப்படுகிறது.