பெட்டாலிங் ஜெயா: ஹைதராபாத்தில் இருந்து கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை (ஜூன் 20) புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, புறப்பட்ட இடத்துக்கே அந்த விமானம் திரும்பியது.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாலை 3.21 மணிக்கு தரையிறங்கியதாகத் தெரிவித்தது.
“அனைத்துப் பயணிகளும் விமானப் பணியாளர்களும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர். அப்பயணிகள் மாற்று விமானத்தில் மலேசியா செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
“அந்த விமானம் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது,” என்று அந்நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

