புதுடெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் வான்வழி ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்புச் சந்திப்பின்போது இது குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். எனினும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும் இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மலேசிய ஆகாயப்படைக்கே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஆகாயப்படையின் துறை சார்ந்த வல்லுநர்கள் முதற்கட்டப் பேச்சுகளை நடத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த தற்காப்பு முயற்சியைத் தாம் பெரிதும் ஆதரிப்பதாக திரு அன்வார் கூறினார்.
இந்தியாவின் தற்காப்பு ஆற்றலை அவர் வெகுவாகப் பாராட்டினார். நெடுந்தொலைவு சென்று இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ், ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் செல்லக்கூடிய ஓர் ஏவுகணையாகும். இதனை நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், தரையில் அமைக்கப்பட்ட ஏவுதளங்களில் இருந்தும் எளிதாகச் செலுத்த முடியும்.
இந்தியாவின் தற்காப்பு ஆய்வு, மேம்பாட்டு நிறுவனமும் ரஷ்யாவின் என்பிஓ நிறுவனமும் இணைந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் அமைப்பை உருவாக்கின. இந்த அதிநவீன ஏவுகணைத் திட்டம் இரு நாடுகளின் கூட்டு முயற்சியாகும்.

