ராகுல் காந்தியுடன் மலேசியப் பிரதமர் அன்வார் சந்திப்பு

ராகுல் காந்தியுடன் மலேசியப் பிரதமர் அன்வார் சந்திப்பு

2 mins read
61e574b6-1c94-41fd-ad7d-6c6b9eedfcc0
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக்கொண்ட தருணம். - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெறும் 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இந்தியாவின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) காலை நடைபெற்ற அந்த உயர்மட்டச் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார்.

காலை உணவருந்துவதற்கான மேசையில் தலைவர்கள் சுமுகமாக உரையாடுவதையும் ராகுல் காந்தியும் அன்வார் இப்ராகிமும் புன்னகையுடன் கைகுலுக்குவதையும் காட்டும் படங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்தியா வந்தபோதும் ராகுல் காந்தியை அன்வார் இப்ராகிம் சந்தித்துள்ளார்.

இந்தியா ஏற்று நடத்தும் பிரிக்ஸ் உச்சிமாநாடு சனி, ஞாயிறு (செப்டம்பர் 12, 13) ஆகிய நாள்களில் டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரிக்ஸ் அமைப்பில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது. அதில் பங்கேற்றபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் மலேசியப் பிரதமர் சந்தித்து உரையாடினார்.

வர்த்தகம், பகுதி மின்கடத்திகள், உள்கட்டமைப்பு, தற்காப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பது குறித்து அப்போது அந்த இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பாடல்கள் பாடிய அன்வார்

இசைப் பிரியரான திரு அன்வார், புதுடெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் சனிக்கிழமை (செப்டம்பர் 12) பிரிக்ஸ் தலைவர்களுடனான சந்திப்புக்கு இடையே கிடைத்த சிறிய இடைவேளையில் இரண்டு இந்திப் பாடல்களைப் பாடினார். அது தொடர்பான காணொளி ஒன்றை அவர் தமது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டுள்ளார்.

திரு அன்வார் ஒரு பியானோ கலைஞரை நெருங்கி, கிஷோர் குமாரின் ‘க்வாப் ஹோ தும் யா கோயி ஹகீக்கத்’ (1965) என்ற இந்திப் பாடலைப் பாடுவதை அதில் காணலாம்.

பின்னர், முகேஷின் ‘தோஸ்த் தோஸ்த் நா ரஹா’ (1964) பாடலை மலேசியப் பிரதமர் பாடத் தொடங்கினார். பியானோ கலைஞரும் உற்சாகமாக அவருடன் சேர்ந்து வாசித்தார்.

திரு அன்வாரின் பாடும் திறனை வரவேற்று சமூக ஊடகங்களில் இந்தியர்கள் பலர் பதிவிட்டுள்ளனர்.

இந்தியாவின் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகம், அந்தக் குரலிசை நிகழ்ச்சியை மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஓர் இசைப் பாலம் என்று வருணித்தது.

குறிப்புச் சொற்கள்
அன்வார் இப்ராகிம்ராகுல் காந்திபிரதமர்