கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் தொலைபேசி வழி உரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரு அன்வார் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதற்கான முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளதற்காக மீண்டும் ஒருமுறை விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததாக அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வரும்போது பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பேன். அப்போது நேரம் இருந்தால் தமிழ்நாட்டுக்குச் செல்வேன், இதுபற்றி முதல்வர் விஜய்யிடம் தெரிவித்துள்ளேன்,” என்றும் திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
மக்களின் நல்வாழ்வு மற்றும் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக, திறம்படப் பணியாற்றத் தேவையான வலிமையும் அறிவாற்றலும் விஜய்க்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவி ஏற்றபோது அவருக்கு திரு அன்வார் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
வருங்காலத்தில் விஜய்யுடன் நெருக்கமான அரசுபூர்வ ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்வதில் தமக்கு ஆர்வம் இருப்பதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

