புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாலத்தீவு முழுமையான ஆதரவை அளிக்கும் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வகையில் புதுடெல்லிக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2023 நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபராக முகமது முய்சு பதவியேற்ற பின்னர், இந்திய சுற்றுலா குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது. மேலும், ஏராளமான இந்தியர்கள், மாலத்தீவுக்கான சுற்றுலாப் பயணத் திட்டத்தைக் கைவிட்டனர்.
மாலத்தீவின் பொருளியலுக்கு சுற்றுலா துறைதான் முக்கியப் பங்களிப்பைச் செய்கிறது. சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடனான உறவை மீண்டும் தொடர விருப்பம் தெரிவித்தார்.