மாலே: வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தினரை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிபரின் இந்த உத்தரவு குறித்து அவருடைய முதன்மைச் செயலாளர் அப்துல்லா நஸிம் இப்ராகிம் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
முன்னதாக, மாலத்தீவிற்கான இந்தியத் தூதரும் தூதரக அதிகாரிகளும் மாலேயில் உள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சு அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) காலை சென்றதாகத் தகவல் வெளியானது. மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை மீட்டுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்பட்டது.
அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என்று முய்சு வாக்குறுதி அளித்திருந்தார்.
கடந்த 2023 செப்டம்பர் மாதம் அவர் மாலத்தீவு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கமாக இந்திய ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்துவந்த நிலையில், முய்சுவின் தேர்தல் பிரசாரம் அதற்கு எதிரானதாக இருந்தது.
பெரும்பாலும் துருவ் ஹெலிகாப்டர்கள் மற்றும் தேடி மீட்கும் பணிகளுக்காக மாலத்தீவிற்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கிய படகுகளின் பராமரிப்புப் பணிகளுக்காகவே இந்திய ராணுவப் படைகள் மாலத்தீவில் உள்ளன. கிட்டத்தட்ட 85 - 90 இந்திய ராணுவப் படையினர் மாலத்தீவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

