புதுடெல்லி: இந்திய அதிபர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவில் 5 நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங், அதிகாரிகள் ஆகியோர் அக்டோபர் 6ஆம் தேதி வரவேற்றனர்.
இதன்பின் அவரை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.
இதற்கிடையே, ஆங்கிலச் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், “மாலத்தீவு இந்தியா உடனான உறவுக்கு முன்னுரிமை அளிக்கும். எங்களுக்கு இந்தியா மதிப்புமிக்க பங்காளி. இருதரப்பு மரியாதையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன,” என்றார்.
“மாலத்தீவு இந்தியா உடன் வலுவான உறவுகளைக் கொண்டிருக்கும். வட்டார நீடித்த நிலைத்தன்மையை உறுதிப்படுத்த கூட்டாக செயல்படுவோம்,” எனத் திரு முய்சு தெரிவித்தார்.
“மற்ற நாடுகளுடன் மாலத்தீவுக்கு இருக்கும் உறவு இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது மாலத்தீவு நாட்டு மக்களின் முடிவாகும். இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பயணம் மாலத்தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். இந்தியா எங்களின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிக்கும் நாடுகளில் ஒன்று,” என்றார் மாலத்தீவு அதிபர்.
இந்நிலையில், திங்கட்கிழமை (அக்டோபர் 7) அதிபர் மாளிகையில் மாலத்தீவு அதிபர் முய்சுவையும் அவரது மனைவியையும் இந்திய அதிபர் முர்முவும் பிரதமர் மோடியும் வரவேற்றனர். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், மாலத்தீவு அதிபர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதற்குப் பிறகு மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அங்கு இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகள் இடையேயான இருதரப்பு நலன், மேம்பாடு, உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் கலந்து கொண்டாலும் இதுவே அவரது முதல் அதிகாரத்துவ பயணமாகும்.

