சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரவேண்டிய ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
விமானத்திலிருந்த 310 பயணிகளும் சென்னையிலுள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டதாக இந்திய ஊடகச் செய்தி ஒன்று கூறியது.
ஸ்கூட் விமானம், தினமும் வழக்கமாக இரவு 10.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்துவிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும்.
அதேபோல் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நள்ளிரவு 12 மணிக்கு, சிங்கப்பூர் புறப்படத் தயாராக இருந்த ஸ்கூட் விமானத்தில் 22 விமானப் பணியாளர்கள் உட்பட 322 பேர் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டறிந்தார்.
அதனைச் சரிசெய்யாமல் வானில் பறப்பது ஆபத்து என்று உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். பின்னர் சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
அதனையடுத்து அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து, இழுவை வண்டி மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. எல்லாப் பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை பழுதைச் சரிசெய்ய இயலாததால் பயணத்தை ரத்து செய்வதாக ஸ்கூட் அறிவித்தது. பயணிகள் அனைவரும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன் பின்னர் நடந்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
