கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள பால்டா தொகுதியில் வாக்குப்பதிவின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, அங்கு வரும் 21ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பால்டா சட்டமன்றத் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கறுப்பு நிற டேப் ஒட்டப்பட்டிருந்தது என்றும் வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க இயலாமல் மிரட்டப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள பொத்தான்களில் வாசனைத் திரவியம், மை பூசி, வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களின் விரல்களில் தேங்கியுள்ள வாசனை, மை நிறம் ஆகியவற்றைக் கொண்டு யாருக்கு வாக்களித்தனர் என்பதை சில தரப்பினர் கண்டறிந்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சில சட்டவிரோதச் செயல்களும் பல வாக்குச் சாவடிகளில் அரங்கேறியுள்ளன. இது வாக்களிப்பதன் ரகசியத் தன்மையை முற்றிலுமாகச் சிதைப்பதாக அமைந்துள்ளது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தாங்கள் அரசியல் கட்சியினரால் மிரட்டப்பட்டதை வாக்காளர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும், பல இடங்களில் தேர்தல் அலுவலர்களே வாக்காளர்களுக்கு வழிகாட்டுவதுபோல் வாக்குப்பதிவு அறைக்குள் நுழைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதும் காணொளிப் பதிவுகள் மூலம் உறுதியானது.
பலர் கள்ள வாக்கு செலுத்தியது, ஒரே நபர் பலமுறை குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களித்தது ஆகிய முறைகேடுகளும் அம்பலமாகியுள்ளன.
இதையடுத்து மேற்கு வங்கத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் பரிந்துரையை ஏற்று, பால்டா தொகுதியில் மீண்டும் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மே 21ஆம் தேதி அங்குள்ள 285 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் மே 24ஆம் தேதி எண்ணப்படும்.

