கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய இருமுக்கியத் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இவற்றில் நந்திகிராம், முதல்வர் சுவேந்து அதிகாரி வென்ற இருதொகுதிகளில் ஒன்று. பாஜகவைச் சேர்ந்த சுவேந்துவிடம் கிட்டத்தட்ட 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா தோல்வி அடைந்தார்.
அதேபோல், மம்தா கட்சியிலிருந்து விலகிய ஹுமாயுன் கபீர், ஆம் ஜனதா உனையன் சார்பில் இரண்டு தொகுதிகளில் வென்றிருந்தார். அதில் ஒன்றான ரெஜிநகரை அவர் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல்.
இரண்டிலுமே முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். இதனால், முதல்வர் சுவேந்து, “பாஜகவிற்கு முஸ்லிம்கள் ஆதரவு உள்ளதா இல்லையா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம்களின் பேராதரவில் 15 வருடங்கள் ஆட்சி செய்த மம்தா, இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. இவர், போட்டியிடாமல் விலகி இருப்பது அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும், தேர்தல் போட்டியில் விலகும் அவரது முடிவு மாநிலத்தின் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
தன் தோல்வியால் துவண்ட 71 வயதான மம்தா இப்போது தனது கவனத்தைத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும் செலுத்த விரும்புகிறார்.
இண்டியா கூட்டணியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, மு.க. ஸ்டாலினின் திமுக போன்ற கட்சிகள் தற்போது விலகி உள்ளன. இருப்பினும், தன் தனிப்பட்ட நட்பால் அவர்களை 2029 மக்களவைத் தேர்தலுக்கு மீண்டும் இணையச் செய்யக்கூடும் என்று மம்தா நம்புகிறார்.
இண்டியா கூட்டணியை வலுப்படுத்துவதில் மம்தா காட்டும் ஆர்வம், எதிர்க்கட்சிகளின் தேசியத் தலைவராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அவரது உத்தியே எனக் கருதப்படுகிறது.
