கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மம்தா பானர்ஜியைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ரிதபிரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்திக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கோல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரிதபிரதா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரசின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்றது. மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோல்கத்தா, பஹ்ராம்பூர், உத்தர்பாரா, ஸ்ரீராம்பூர், டம் டம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் ரிதபிரதா பானர்ஜி, சந்தீபன் சாஹா, கோல்கத்தாவின் முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் 10 பேர் கொண்ட புதிய தேசியச் செயற்குழு ஒருமனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து திருவாட்டி மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக அரூப் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற தலைவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

