கோல்கத்தா: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த சட்ட நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.
‘எஸ்ஐஆர்’ என்பது ஒரு கொல்லைப்புற (பின்வாசல்) நடவடிக்கை என்றும் இதன் மூலம் தகுதியுள்ள வாக்காளர்களும்கூட தங்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என்றும் தமது மனுவில் முதல்வர் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டு அறிவிப்பைப் பின்வாசல் வழியாகச் செயல்படுத்த சூழ்ச்சி நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 2) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்லியில் சந்தித்துப் பேசினார் முதல்வர் மம்தா.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையானது, வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒருவகைத் துன்புறுத்தல் என்றும் இதனால் 140 பேர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்து மேலும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எஸ்ஐஆர் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள சில பார்வையாளர்கள் அரசாங்கத் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் இது தகுதியுள்ள வாக்காளர்கள் பெருமளவில் விலக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதும் மேற்குவங்க முதல்வரின் குற்றச்சாட்டாகும்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் ஆணையரைச் சந்திக்க டெல்லி செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, எதிர்வரும் மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி என்பதால் அது தேர்தல் ஆணையத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்றார்.
“அவர்களுக்குத் துணிச்சல் இருந்தால், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அரசியல் ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுப்பேன்,” என்றார் முதல்வர் மம்தா.

