கோல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் அனல்பறக்கும் பிரசாரம் நடந்துவரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி மீது அனைத்துலக அரசியல் நோக்கர்களின் பார்வை குவிந்துள்ளது.
இம்முறை மம்தாவை எப்படியேனும் இத்தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என பாஜக வரிந்துகட்ட, அவரும் முழு வீச்சில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டுத் தேர்தலில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை ஈட்டியது. அச்சமயம் நந்திகிராம் தொகுதியில் களமிறங்கினார் மம்தா. அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். தேர்தல் முடிவு மம்தா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார் மம்தா.
இதையடுத்து, பவானிப்பூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து முதல்வராக நீடித்து வருகிறார்.
இம்முறையும் அவர் பவானிப்பூர் வேட்பாளராகத்தான் களமிறங்குகிறார்.
பாஜகவும் விடுவதாக இல்லை. கடந்த முறை நந்திகிராமில் முதல்வர் மம்தாவை வீழ்த்திய மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியை மீண்டும் மம்தாவுக்கு எதிராக பவானிப்பூரிலும் களமிறக்குகிறது பாஜக.
இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டாலும், மம்தா தரப்பில் பவானிப்பூரில் வெற்றி உறுதி என்று தயக்கமின்றி கூறப்படுகிறது.
இத்தனைக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை, மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார் சுவேந்தர் அதிகாரி. ஆனால், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியில் இருந்து விலகிய அவர், பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்று வருகிறார் சுவேந்து.
தொடர்புடைய செய்திகள்
பாஜகவைத் தீவிரமாக எதிர்க்கும் தலைவர்களில் மத்தாவுக்கு முதன்மை இடமுண்டு. வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின்போது தனது பவானிப்பூர் தொகுதியில் இருந்து 40 ஆயிரம் பேர் மீட்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், தன்னைத் தோற்கடிக்க உயிரோடு உள்ள பலரது வாக்குகளைத் தேர்தல் ஆணையம் மூலம் பாஜக நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
எனினும், சிறுபான்மையினர் ஆதரவுடன் மம்தா வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் 71% வாக்குகளை அள்ளிய முதல்வர் மம்தா, இம்முறை அதைவிட அதிக வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறுகின்றனர்.

