தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணமான மறுநாளே மாரடைப்பால் மாண்டுபோன மணமக்கள்

1 mins read
d4b63be8-0264-4e22-9e88-6b6b77d7ec30
புது மணமக்கள் இருவரின் உடல்களும் ஒரே சிதையில் வைத்து எரியூட்டப்பட்டன. மாதிரிப்படம் -

லக்னோ: திருமணமான மறுநாளே மணமக்கள் இருவரும் மாரடைப்பால் மாண்டுபோன அதிர்ச்சி நிகழ்வு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றது.

பிரதாப் யாதவ், 24, புஷ்பா யாதவ், 22 என்ற இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருமணம் செய்துகொண்டனர்.

இரவு முழுதும் நடந்த கொண்டாட்டங்களுக்குப் பிறகு மறுநாள் அவர்கள் பஹ்ராய்ச்சில் உள்ள தங்கள் இல்லத்திற்குத் திரும்பியதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

திருமணத்திற்குப் பிந்திய சடங்குகளை முடித்துவிட்டு, பிரதாப்பும் புஷ்பாவும் தங்கள் அறையில் உறங்கச் சென்றனர். வியாழக்கிழமை நண்பகல்வரை அவர்கள் கதவைத் திறந்து வெளியே வராததால் பரபரப்பு ஏற்பட்டது.

கதவைத் திறந்து பார்த்தபோது, அவர்கள் இருவரும் மாண்டுகிடந்தது தெரியவந்தது.

அவர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களின் அறை சோதிக்கப்பட்டதாக அச்செய்தி தெரிவித்தது.

இருவருக்கும் ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதை உடற்கூறாய்வு அறிக்கை காட்டுவதாக பல்ராம்பூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரசாந்த் வர்மா கூறினார்.

அதற்குமுன் இருவரும் இதயநோயால் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வேறு எவரும் வலுக்கட்டாயமாக அவர்களின் அறைக்குள் சென்றதற்கான அறிகுறிகளோ, அவர்களின் உடலில் காயங்களோ இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இருவரது உடல்களும் ஒரே சிதையில் வைத்து எரியூட்டப்பட்டன.

சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.