அமராவதி: அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலப் பேரங்காடியில் ஜூன் 21ஆம் தேதி ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 32 வயது ஆடவர் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தில் மாண்ட நால்வரில் தாசரி கோபிகிருஷ்ணாவும் அடங்குவார்.
அவர் எட்டு மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்றதாகக் கூறப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ‘மேட் புட்சர்’ பேரங்காடியில் கோபிகிருஷ்ணா பணிபுரிந்தார்.
வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் முகப்பில் பணியாற்றிய அவருக்கு சம்பவத்தில் பலத்த காயமேற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் மறுநாள் உயிரிழந்தார்.
கோபிகிருஷ்ணா தன் மனைவியையும் மகனையும் விட்டுச்சென்றுள்ளார்.
துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான கண்காணிப்பு கேமராப் பதிவில் துப்பாக்கிக்காரர் அந்தப் பேரங்காடியில் நுழைவதையும் பணம் செலுத்தும் முகப்பில் பணியாற்றிய கோபிகிருஷ்ணாவைச் சுடுவதையும் காணமுடிகிறது.
பாதிக்கப்பட்ட கோபிகிருஷ்ணா தரையில் விழுவதும் அவர் பணியாற்றிய முகப்பின்மேல் ஏறிக் குதித்த துப்பாக்கிக்காரர் அலமாரியில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு தப்பியோடுவதும் அதில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவத்தில் மேலும் மூவர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.

