புனே: விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கிய அதன் ஓட்டுநர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த காணொளி இணையத்தில் பரவியது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் சனிக்கிழமை (மார்ச் 8) இச்சம்பவம் அரங்கேறியது.
அதனைத் தொடர்ந்து, தமது செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட கௌரவ் அகுஜா என்ற அந்த ஆடவர், பின்னர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
நடுச்சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய அகுஜா, பின்னர் சாலைப் பிரிப்பான்மீது சிறுநீர் கழித்தார்.
காரினுள் பாக்யேஷ் ஓஸ்வால் என்ற இன்னொரு ஆடவர், கையில் மதுப்புட்டியுடன் இருந்ததைக் காணொளி காட்டியது.
தமது அருவருக்கத்தக்க செயலை எண்ணி சற்றும் வருத்தப்படாத அகுஜா, பின்னர் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
அதுகுறித்த காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட, அது வேகமாகப் பரவியது.
அதனால் பிரச்சினை ஏற்படலாம் என்பதை உணர்ந்த அகுஜா, தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், காவல்துறையிடம் சரணடையப் போவதாகவும் கூறி, காணொளி வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில் ஓஸ்வாலும் கைதுசெய்யப்பட்டார். சம்பவத்தின்போது இருவரும் மது அருந்தியிருந்தனரா என்பதைக் கண்டறிய ஞாயிற்றுக்கிழமை காலை இருவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பின்னர் அவ்விருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று காவல்துறை தெரிவித்தது.