அதிபர், பிரதமரை அவமதித்து காணொளி: பீகார் ஆடவர் கைது

1 mins read
357666f7-6546-4794-a63b-4ab38475bbef
அவதூறான காணொளியைத் தயாரிக்க ஆடவர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதாகக் காவல்துறை கூறியது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

முஸாஃபர்பூர்: அதிபரையும் பிரதமரையும் அவதூறாகச் சித்திரித்து போலி காணொளி மற்றும் குரல் பதிவுகளை வெளியிட்ட ஆடவர் ஒருவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரமோத் குமார் ராஜ் என்ற அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தயாரித்து சமூக ஊடகங்களில் பதவிட்டதாகக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) கூறினர்.

பொதுமக்களைக் குழப்பும் விதமாக, அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருவதாகத் தங்களுக்குக் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசாங்க அமைப்புகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் சமூக நல்லிணக்கத்தையும் சட்டம் ஒழுங்கயைும் சீர்குலைக்கும் நோக்கத்தோடும் அவை தயாரிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தேச விரோத உணர்வுகள், சமூக அமைதியின்மை ஆகியவற்றை உருவாக்கி, வதந்திகளைப் பரப்ப இதுபோன்ற உள்ளடக்கங்கள் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

இது மிகவும் ஆபத்தான சம்பவம் என்பதால், காவல்துறையின் இணையக் குற்றப் பிரிவு அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தக் குழு, தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பான மின்னிலக்க ஆதாரங்களைத் திரட்டி உள்ளது.

குறிப்புச் சொற்கள்