மும்பை: கடந்த சில நாள்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடவரை மகாராஷ்டிர மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
35 வயதான ஜக்தீஷ் உயிகே என்ற அந்த ஆடவர், நாக்பூர் நகரில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் விமானங்களுக்கு மட்டுமின்றி, பிரதமர் அலுவலகம், ரயில் அமைச்சர், மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு வழக்கில் கைதாகி உள்ளார் ஜக்தீஷ். அதன் பின்னர் இவர் பயங்கரவாதம் தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 15 நாள்களில் மட்டும் இந்தியாவில் பல முன்னணி விமானச் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
ஏறக்குறைய 400 மிரட்டல் சம்பவங்கள் பதிவான நிலையில், ஜக்தீஷ் எத்தனை மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவில்லை.

