தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் அத்துமீறிய ஆடவர் கைது

1 mins read
c79b4ec8-87be-4ddb-8a2a-9a72616c3b76
ஆஸ்திரேலிய வீராங்கனைகளைப் பின்தொடர்ந்த மோட்டார்சைக்கிளோட்டி, அவர்களில் இருவரைத் தகாத இடங்களில் தொட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார். - படங்கள்: இந்திய ஊடகம்

இந்தூர்: மோட்டார்சைக்கிளில் வந்த ஆடவர் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரைத் தகாத இடங்களில் தொட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் மகளிர்க்கான ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பங்கேற்றுவரும் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டது.

கடந்த புதன்கிழமை இந்தூரில் நடந்த முதற்சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

மறுநாள் வியாழக்கிழமை காலை அங்குள்ள ‘கஃபே’ ஒன்றுக்கு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் நடந்துசென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்த மோட்டார்சைக்கிளோட்டி, அவர்களில் இருவரைத் தகாத இடங்களில் தொட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளது. அதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் பாதுகாவல் குழு, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இதனிடையே, சம்பவம் தொடர்பில் அகீல் கான் என்ற ஆடவரை இந்தூர்க் காவல்துறை வெள்ளிக்கிழமை கைதுசெய்துவிட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் நிகழ்ந்தபோது அப்பகுதியில் இருந்த ஒருவர் அகீல் கான் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளின் பதிவெண்ணைக் குறித்து வைத்ததாகவும் அதனடிப்படையில் அவரைக் கைதுசெய்ததாகவும் காவல்துறை அதிகாரி ஹிமானி மிஸ்ரா தெரிவித்தார்.

கான்மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்